கோவை:
கோவையை அடுத்த சூலூர் விமானப்படையில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருபவர் அன்பு. இவர் கடந்த 2008-ம் ஆண்டு சாமளாபுரம் பெருமாம்பாளையத்தில் 5½ சென்ட் கொண்ட வீட்டுமனையை சுப்பிரமணியம் (வயது 71) என்பவரிடமிருந்து வாங்கினார். இந்த நிலை யில் அந்த வீட்டு மனையில் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தார்.
அப்போது அந்த வீட்டுமனை வேறு 2 பெண்களுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பு இதுகுறித்து கோவை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-
கடந்த 2008-ம் ஆண்டு அன்பு அந்த வீட்டுமனையை வாங்கிய பின்னர், அதை விற்ற சுப்பிரமணியம் மற்றும் நிலபுரோக்கர் அந்தோணி ராஜ் (50) ஆகியோர் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து சுல்தான்பேட்டையை சேர்ந்த 2 பெண்களிடம் விற்றுள்ளனர். இதன் மூலம் ரூ.35 லட்சம் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.
இந்த மோசடி தொடர்பாக சுப்பிரமணியம் மற்றும் அந்தோணிராஜ் ஆகியோர் மீது போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நில புரோக்கர் அந்தோணிராஜ் கைது செய்யப்பட்டார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.