செய்திகள்

உடன்குடி அருகே புதுப்பெண் மர்ம மரணம்: கிணற்றில் பிணமாக கிடந்தார்

உடன்குடி அருகே புதுப்பெண் மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள செல்வபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது32). இவரது மனைவி நித்யவதி (30). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. உடன்குடி அருகே தேரியூரில் உள்ள தோட்டத்தில் கணவன்-மனைவி இருவரும் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர்.

சம்பவத்தன்று தோட்டத்தில் இருந்த நித்யவதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வக்குமார் மனைவியை தேடி பார்த்தார். அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நித்யவதி மர்மமான முறையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து நித்யவதி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து வீசினார்களா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு திசு, ஆர்.டி.ஓ. கணேஷ்குமார் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.