ஷோபனா 
செய்திகள்

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

கொடைக்கானல்:

கொடைக்கானல் தாலுகா கவுஞ்சி கிராமம் ராஜபுரத்தை சேர்ந்தவர் கோபால். அவருடைய மகள் ஷோபனா (வயது 21). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி திருமணம் நடந்தது. அஜித்குமார் கொடைக்கானலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அதனால் தன்னுடைய மனைவியுடன் அப்சர்வேட்டரி செல்லபுரம் பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷோபனா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஷோபனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் ஷோபனாவின் தந்தை கோபால் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் ஷோபனாவுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் கொடைக்கானல் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார்.