சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிறை சென்று இன்றுடன் சரியாக 5 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. இன்னமும் அவர்கள் சுமார் 3½ ஆண்டுகள் சிறை வாசத்தை அனுபவிக்க வேண்டியதுள்ளது.
இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சசிகலாவுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைப்பதற்கு தனியாக ஒரு சமையல் கூடத்தையே சிறைக்குள் கட்டப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டது. இத்தகைய சலுகைகளைப் பெற சிறைத்துறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பினர் ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு 4 பக்க கடிதம் அனுப்பினார். இதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி தினமும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. சிறைத்துறையில் முறைகேடுகள் நடப்பது வெட்ட வெளிச்சமாகி இருப்பதால் கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் இது புயலை கிளப்பியுள்ளது.
இதற்கிடையே ரூ.2 கோடி லஞ்சம் விவகாரம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை குழு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று விசாரித்து ஒரு வாரத்தில் முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். விரிவான அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
விசாரணை குழுவில் அனுபவமும், திறமையும் வாய்ந்த மூத்த போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து பலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். எனவே இந்த குழுவின் விசாரணையில் புதிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணைக்குழுவில் ஒரு பிரிவினர், ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் சசிகலாவிடம் தனியாக விசாரணை நடத்த உள்ளனர். தேவைப்பட்டால் இளவரசியிடமும் அவர்கள் விசாரிப்பார்கள் என்று கூறப்படுகிறது. லஞ்சம் எப்படி கைமாறியது என்பதை உறுதி செய்ய தேவையான ஆய்வுகளை நடத்தவும் விசாரணை குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அதே சமயத்தில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் சிறைத்துறை அதிகாரிகளிடம் மற்றொரு குழுவினர் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ் மற்றும் பெங்களூர் சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளரிடம் விசாரணை மேற்கொள்வார்கள். கைதிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
பெங்களூர் சிறையில் நடக்கும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர் பெங்களூர் சிறைக்குள் உள்ள சில விதிமீறல்களை படம் பிடித்து பதிவு செய்து வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அவற்றையும் விசாரணைக்குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த நிலையில் எந்தவித விசாரணைக்கும் தயார் என்று டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், டி.ஐ.ஜி. ரூபா இருவரும் அறிவித்துள்ளனர். அவர்களது அலுவலக பணி ஆவணங்கள் மற்றும் சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சிகளும் ஆய்வு செய்யப்பட உள்ளன.
சசிகலா மற்றும் சிறைத்துறை அதிகாரிகளிடம் நடத்தப்படும் விசாரணையில் புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுடன் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசியலில் ரூ.2 கோடி புகார் பெரும் புயலை கிளப்பியுள்ளதால் விசாரணை தீவிரமாகும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் விசாரணைக்குழு வரும் முன்பே ஆதாரங்கள் அனைத்தையும் அழிக்கும் பணி நடந்து முடிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. கர்நாடகா சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூர் சிறைக்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் யார் - யார் என்பதை உறுதிபடுத்த அந்த வீடியோ பதிவுகள் ஆதாரமாக இருந்தன. அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டதாக ஒரு தகவல் உறுதியாகியுள்ளது.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் கட்டப்பட்டிருந்த சிறப்பு சமையல் கூடமும் இடித்து அகற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறைக்கைதிகளை வைத்து அந்த சமையல் அறை இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தவிர சசிகலாவை சாதாரண குற்றவாளி போல காட்டுவதற்கான ஏற்பாடுகளும் பெங்களூர் சிறையில் செய்து முடிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. இதன் மூலம் பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் சசிகலாவுக்கு எந்த சிறப்பு வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என்று விசாரணை குழுவிடம் காட்ட ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஒரு சாரார் சொல்கிறார்கள்.
என்றாலும் டி.ஐ.ஜி. ரூபா சில விதிமீறல்களை படம் பிடித்து வைத்துள்ளார். அவை மூலம் ரூ.2 கோடி லஞ்சத்தை நிரூபிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
விசாரணைக்குழு அறிக்கையில் தவறு நடந்து இருப்பது உறுதியானால், மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும் என்று சிறைத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இது சசிகலா தரப்பினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.