ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் பிரிட்டனும் அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது. அதில் இணைந்துள்ளதால் பிரிட்டன் தனது தனித்தன்மையையும் இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர்.
அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்சிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே பிரெக்சிட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கையை மார்ச் 29-ந்தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மேயின் கட்சி எம்.பி.க்களே அவருக்கு எதிராக வாக்களித்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய வரலாறு கடந்த 19-ம் நூற்றாண்டில் நடைபெற்றது.
1886-ம் ஆண்டு பிரதமராக இருந்த வில்லியம் கிளேடுஸபோன் அயர்லாந்து உள்நாட்டு கொள்கையை ஆதரித்தார். அது குறித்த வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி 2 ஆக உடைந்து, தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அதே நிலை தற்போது திரும்பியுள்ளது.