பிரேசிலியா:
பிரேசில் நாட்டின் முன்னாள் ராணுவ வீரர் எர்மாண்டோ பிவெட்டோ (வயது 99). இவர் 2-ம் உலகப்போரின் போது, ஆப்பிரிக்காவில் பிரேசில் ராணுவ படையில் பணியாற்றி வீரதீர செயல்களை புரிந்தவர். தலைநகர் பிரேசிலியாவில் வசித்து வரும் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், தொடர்ந்து 8 நாட்கள் மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் மூலம் எர்மாண்டோ பிவெட்டோ கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். முன்னதாக, எர்மாண்டோ பிவெட்டோ தனது 99 வயதில் கொரோனா தொற்றில் இருந்து போராடி மீண்டதை சிறப்பிக்கும் விதமாக ராணுவ மரியாதையுடன் அவர் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எர்மாண்டோ மற்றொரு போரில் வெற்றி பெற்றுள்ளார். இம்முறை அவர் கொரோனா வைரசுடன் போராடி வெற்றி கண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.