செய்திகள்

பானி புயல் தாக்கிய போது துணிச்சலாக பணியாற்றிய ரேடியோ பெண் வர்ணனையாளர்

புவனேஸ்வர் மாவட்டம் கோனார்க் பகுதியில் உள்ள ரேடியோ நிலையத்தில் பெண் வர்ணனையாளர் துணிச்சலாக பணியாற்றி புயல் குறித்த செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பினார்.

மாலை மலர்

ஒடிசாவில் கடந்த 3-ந்தேதி கரையை கடந்த பானி புயல் அம்மாநிலத்தை புரட்டிப் போட்டது.

புவனேஸ்வர் மாவட்டத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்திய புயலால் விமான சேவைகளும், பாதிக்கப்பட்டது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிய நிலையில் கோனார்க் பகுதியில் உள்ள ரேடியோ நிலையத்தில் பெண் வர்ணனையாளர் ரோஜலின் பிரேதன் துணிச்சலாக பணியாற்றி புயல் குறித்த செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்.

புயலால் ரேடியோ நிலையத்தின் சுவர்கள் இடிந்து விழுந்த நிலையிலும், அவர் அச்சப்படாமல் வேலை செய்தார். புயல் கரையை கடப்பதற்கு முதல் நாள் ரோஜலின் இரவு நேர பணியில் இருந்தார். மறுநாள் காலை பணி முடிந்ததும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. ஆனால் அந்த ரேடியோ நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் யாரும் அன்று வேலைக்கு வரவில்லை.

காலை 9 மணிக்கு புயல் தாக்கிய வேளையில் தனி ஆளாக பணிபுரிந்த ரோஜலின் பேரிடர் குறித்த தகவல்களை மக்களுக்கு கூறியதாக ரேடியோ நிலைய அதிபர் ஷா அன்சாரி கூறினார்.