செய்திகள்

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் இதயம் ஏழை தொழிலாளிக்கு பொருத்தப்பட்டது

செங்குன்றம் அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த சென்னை வாலிபரின் இதயம் ஏழை தொழிலாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னை அண்ணாநகர் 12-வது பிரதான சாலையை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி மல்லிகா. இவர்களது மகன் ஸ்ரீகாந்த் (19). மருந்து விற்பனை பிரதிநிதியாக இருந்தார்.

கடந்த 20-ந்தேதி பணி முடித்துவிட்டு செங்குன்றத்தில் இருந்து தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது.

இதனால் தலையில் படுகாயம் அடைந்த அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார்.

அதை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய ஸ்ரீகாந்தின் பெற்றோர் பழனி-மல்லிகா ஆகியோர் சம்மதித்தனர்.

அதையடுத்து ஸ்ரீகாந்தின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கண்கள், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தானமாக வழங்கப்பட்டது.

இதயம் ஒமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு சிறுநீரகம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

மேலும், கல்லீரல் குமரன் ஆஸ்பத்திரிக்கும், நுரையீரல் குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. கண்கள் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டது. தோல் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்ட சிறுநீரகம் நோயாளிக்கு பொருத்தப்படவில்லை. அது பயனற்று போனதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரியில் இதயம் செயல்படாமல் உயிருக்கு போராடிய ஏழை தொழிலாளிக்கு பொருத்தப்பட்டது.