செய்திகள்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அதன் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை போரூரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 19). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அருண்குமார் தன்னுடைய நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, கடந்த 9-ந் தேதி சென்னை திரும்பிக்கொண்டு இருந்தார்.

விழுப்புரம் அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு வாகனம், அருண்குமார் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த அருண்குமார் தூக்கிவீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் அவருக்கு தலையில் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மூளைச்சாவு ஏற்பட்டு இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அருண்குமாரின் பெற்றோரிடம் மூளைச்சாவு அடைந்தது குறித்தும், உடல் உறுப்புகள் தானம் குறித்தும் டாக்டர்கள் விரிவாக எடுத்துக்கூறினார்கள். அதன்படி, அருண்குமாரின் பெற்றோர் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வந்தனர்.

இதையடுத்து அருண்குமாரின் உடலில் இருந்து இதயம், 2 சிறுநீரகங்கள், கல்லீரல், தோல், 2 கண்கள் தானமாக பெறப்பட்டன. இதில் இதயம் சென்னை முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மருத்துவ மிஷன் மருத்துவமனைக்கும், 2 சிறுநீரகங்கள் சென்னை மருத்துவ கல்லூரிக்கும், கல்லீரல் மற்றும் தோல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும், 2 கண்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன இதன் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.