சக்திவேல் 
செய்திகள்

பள்ளிப்பட்டில் கொசஸ்தலை ஆற்றின் தடுப்பணையில் சிறுவன் பிணமாக மீட்பு

பள்ளிப்பட்டில் கொசஸ்தலை ஆற்றின் தடுப்பணையில் சிறுவன் சக்திவேல் உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மேளப்பூடி காலனியைச் சேர்ந்தவர் வைகுந்தன் (வயது 39). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாரிகா (35). இவர்களுக்கு 3 மகள்களும், சக்திவேல் (11) என்ற மகனும் உண்டு.சக்திவேல் மனநலம் குன்றியவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் சக்திவேல் வீடு திரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து மகன் மாயமானது குறித்து சிறுவனின் தந்தை வைகுந்தன் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பள்ளிப்பட்டு தாலுகா சொரக்காய்பேட்டை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் ஒரு சிறுவனின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன சிறுவன் சக்திவேல் என்பது தெரிய வந்தது. அதன் பின்னர், போலீசார் சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான சக்திவேல் கால்தவறி தடுப்பணையில் விழுந்து இறந்தானா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT