செய்திகள்

பாபநாசம் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு - பயணி படுகாயம்

பாபநாசம் அருகே அரசு டவுன் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் பயணி காயம் அடைந்தார்.

மாலை மலர்

பாபநாசம்:

பாபநாசத்தில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று இரவு அரசு டவுன் பஸ் சென்றது. இதனை மதகரத்தை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் ஓட்டி சென்றார்.

இந்த பஸ் பாபநாசம் அருகே உள்ள மணலூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர்கள் சிலர் நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டிருந்தனர்.

இதனை பஸ் டிரைவர் ராஜேந்திரன் கண்டித்தார். அப்போது அந்த வாலிபர்கள் அவரிடம் தகராறு செய்தனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

திடீரென ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல் மற்றும் கட்டையால் உடைத்தனர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அப்போது பஸ்சில் பயணம் செய்த மணலூரை சேர்ந்த பயணிக்கு காயம் ஏற்பட்டது.

அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து பஸ் டிரைவர் பாபநாசம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் பஸ்சின் கண்ணாடியை உடைத்தது பூவரசன், ஸ்டீபன், ஹரிகரன், சேத்தமங்கலத்தை சேர்ந்த ரஞ்சித், பாரதி மற்றொரு பூவரசன் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.