செய்திகள்

அதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி

கோடை விடுமுறை இன்று முதல் தொடங்க இருக்கும் நிலையில், மும்பை ஐகோர்ட் நீதிபதி ஷாருக் காதாவாலா நேற்று காலை தொடங்கி இன்று அதிகாலை 3.30 மணி வரை வழக்குகளை விசாரித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். #BombayHC

மாலை மலர்

மும்பை:

சுப்ரீம் கோர்ட் மற்றும் மாநில ஐகோர்ட்டுகளுக்கு கோடைக்கால விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது. கோடை விடுமுறையின் போது மிக அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும். அவசரகால வழக்குகளை விசாரிக்க ஒன்று அல்லது இரண்டு நீதிபதிகள் இருப்பார்கள்.

மும்பை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை தொடங்க உள்ளதால் நேற்று முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மாலை 5 மணி ஆனதும் எல்லா நீதிபதிகளும் பணியை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டனர். ஒருவரை தவிர.

நீதிபதி ஷாருக் காதவாலா பணி நேரம் முடிந்த பின்னரும், தனது அமர்வு விசாரிக்க உள்ள எல்லா வழக்குகளையும் விசாரித்து இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதுவும், இன்று அதிகாலை 3.30 மணி வரை. “நூற்றுக்கும்  மேற்பட்ட சிவில் வழக்குகள் அவர் வசம் ஒதுக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் விசாரித்து அவர் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளார்” என அவருடன் காலை வரை இருந்த சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

மும்பை ஐகோர்ட்

“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதிகாலை 3.30 மணி வரை அவரது அமர்வில் இருந்த கோர்ட் பணியாளர்களும் தங்களது பணியை மேற்கொண்டுள்ளனர்.

இப்போது மட்டுமல்ல நீதிபதி காதவாலா இதற்கு முன்னர் பலமுறை நள்ளிரவு வரை வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.