சென்னை:
சென்னையில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம போன் வந்தது.
அதில் பேசிய நபர் நடிகை குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சில மணி நேரங்களில் வெடிக்கும் என்றும் கூறி விட்டு போனை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
பட்டினப்பாக்கத்தில் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள குஷ்புவின் வீட்டுக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது குஷ்பு வீட்டில் இல்லை. வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். குஷ்பு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்றிருப்பது தெரியவந்தது.
இருப்பினும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் குஷ்புவின் வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால் வெடி பொருட்களோ, சந்தேகத்துக்கிடமாக எந்த பொருளுமோ சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இதன் பின்னரே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மிரட்டல் ஆசாமியை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். குஷ்புக்கு பிடிக்காத நபர்கள் யாரும் வேண்டுமென்றே வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.