செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல்: முன்று மணி நேரம் தாமதமான ஏர் இந்தியா விமானம்

ஜோத்பூர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் விமான புறப்பாட்டை மூன்று மணி நேரத்திற்கு தாமதப்படுத்தியது.

மாலை மலர்

ஜோத்பூர்:

ஜோத்பூர் சிவில் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவல் விமான புறப்பாட்டை மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாக்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானதும், ஏர் இந்தியா பணியாளர்கள் அனைத்து பயணிகளையும் விமானத்தில் இருந்து வெளியேற்றி விமானத்தை முழுமையாக சோதித்தனர். முழுமையான சோதனை நிறைவுற்றதும் விமானம் டெல்லி புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரியான ஜி.கே. காரி தெரிவித்தார். 

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை மற்றும் இதர பாதுகாப்பு நிறுவனங்கள் அவரசமாக விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் முழுவீச்சில் நடத்தப்பட்டது. எனினும் சோதனையில் தகவல் பொய்யானது உறுதி செய்யப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார். 

விமானத்தில் சோதனை துவங்கி, நிறைவு பெறும் வரை பயணிகள் அனைவரும் விமான நிலையத்தின் காத்திருக்கும் இடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையானவற்றை விமான பணியாளர்கள் செய்து கொடுத்தனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.