விழுப்புரம்:
சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 10.05 மணிக்கு டெலிபோன் அழைப்பு வந்தது.
மறுமுனையில் மர்மநபர் விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ்சில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அனைத்து போலீசாரையும் உஷார் படுத்தினார்.
இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் தமிழுடன் விழுப்புரம் புதிய பஸ்நிலையத்துக்கு விரைந்தனர். அங்கு நின்ற ஒவ்வொரு அரசு பஸ்களிலும் ஏறி வெடிகுண்டு நிபுணர்கள் அங்குலம், அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினார்கள். மேலும் பஸ்நிலையத்தில் உள்ள கடைகள், பயணிகளின் உடமைகள், கேட்பாரற்று கிடந்த சாக்கு மூட்டைகள், பொருட்கள் காப்பக அலுவலகத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் பொருட்களையும் எடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன்பின்னரே போலீசார் நிம்மதி அடைந்தனர்.
மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஒவ்வொரு பஸ்சாக ஏறி இறங்கும்போது பயணிகள் என்னவோ? ஏதோ? என்று தெரியாமல் இருந்தனர்.
இந்த விபரம் தெரிந்ததும் அவர்கள் பீதி அடைந்தனர். பஸ் நிலையத்தை விட்டு பயணிகள் ஓட்டம் பிடித்தனர். இதனால் பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
டி.ஜி.பி. அலுவலகத்துக்கு போனில் மிரட்டிய மர்ம நபர் விழுப்புரத்தில் இருந்துதான் பேசி உள்ளான். அவன் பேசிய போன் எண்ணை வைத்து போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.