செய்திகள்

போபர்ஸ் ஊழல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு

போபர்ஸ் பீரங்கி பேர வழக்கில் இந்துஜா சகோதரர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. #BoforsScam #CBIchallengesverdict

மாலை மலர்

போபர்ஸ் பீரங்கிகள் ஊழல் தொடர்பாக புகார் கூறப்பட்ட இந்துஜா சகோதரர்களுக்கு எதிரான, அனைத்து வழக்குகளையும் 2005-ம் ஆண்டு மே 31-ம் தேதி டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அப்போது சி.பி.ஐ., திட்டமிட்டது. ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியானது.

சில நாட்களுக்கு முன், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் தொடர்பாக, தனியார் துப்பறிவாளர் மைக்கேல் ஹெர்ஷ்மாம் சில  குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கப் போவதாக சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்துஜா சகோதரர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 12 ஆண்டுகளுக்கு பின் அனுமதி கேட்டு கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசுக்கு சி.பி.ஐ., கடிதம் எழுதியது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.