திருவாரூர்:
குடவாசல் ஒன்றியம் சீதக்கமங்கலம் அருகே மேலபிடாகை கிராமத்தை சேர்ந்த சாமிநாதன், அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் சீதக்கமங்கலம் அருகே மேலபிடாகை பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறோம். எங்களது ஒரே மகன் வீரமணி (25) கடந்த 2019-ம் ஆண்டு குவைத்திற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெளிநாட்டில் இருந்து எனது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஒருவர் வீரமணி இறந்து விட்டதாக தெரிவித்தார். எப்படி இறந்தார்? என காரணம் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் போன் இணைப்பினை துண்டித்தார்.
இதனையடுத்து வெளிநாட்டில் உள்ள உறவினர்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது வீரமணி இறந்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதனால் பெற்ற மகனை இழந்து தவித்து வருகிறோம். எனவே குவைத்தில்இறந்த எனது மகனின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.