செய்திகள்

காட்டு தீயில் கருகி இறந்த தனியார் நிறுவன பெண் மேலாளர் உடல் இன்று தகனம்

குரங்கணி வனபகுதியில் காட்டு தீயில் பலியான பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண்ணின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

மாலை மலர்

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மாயாபஜார் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ஒளி. இவர் சென்னையில் மத்திய தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருடைய மனைவி ஆனந்தி. இவர்கள் தற்போது குடும்பத்துடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நிஷா, நிரோஷா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் நிஷா, பி.டெக். படித்து விட்டு இங்கிலாந்தில் எம்.எஸ். முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் டிரக்கிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். இவர் கடந்த சில வருடங்களாக டிரக்கிங் சென்று வந்துள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி தேனியில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக ஒரு குழு சென்றது. அவர்களுடன் நிஷாவும் மலையேற்ற பயிற்சிக்காக சென்றார்.

அப்போது மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு அவருடைய உடலை கைப்பற்றினர்.

நிஷா காட்டு தீயால் பலியான சம்பவம் குறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகலவறிந்த அவர்கள் கதறி அழுதனர். தனது மகளின் இறுதி சடங்குகளை பாப்பிரெட்டிப்பட்டியில் நடத்த முடிவு அவரது உறவினர்கள் செய்தனர்.

நிஷாவின் உடல் நள்ளிரவு 2 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி மாயாபஜாரில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு வரப்பட்டது.

அப்போது நிஷாவின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து அவரது உடலுக்கு பாப்பிரெட்டிப்பட்டி கோட்டாட்சியர் பானுமதி, வட்டாட்சியர் சரவணன், வனவர் வெங்கடேசன் மற்றும் அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், நிஷா வேலை செய்யும் சென்னையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அவரது கல்லூரி நண்பர்கள் ஆகியோர் திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியதால் அந்த பகுதியில் பெரும் சோக மயமாக காணப்பட்டன.

நிஷாவின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு இன்று தகனம் செய்யப்படுகிறது. #tamilnews