செய்திகள்

பாரிமுனையில் நீல திமிங்கல விளையாட்டு ரூ.50-க்கு பதிவிறக்கம்

நீல திமிங்கல விளையாட்டை பதிவிறக்கம் செய்து கொடுப்பவர்கள், ஷேர் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

இணைய தள விளையாட்டு பிரியர்களை தற்கொலைக்கு தூண்டும் நீலதிமிங்கல விளையாட்டை தடை செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை இன்று உத்தரவிட்டு இருப்பது நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

இந்த விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

சென்னை பாரிமுனையில் கேம்கள் பதிவிறக்கம் செய்து கொடுப்பது பரபரப்பான தொழிலாக நடக்கிறது.

இணைய வசதி இல்லாதவர்கள் பென் டிரைவ், செல்போன் மெமரி கார்டுகளை கொடுத்தால் அதில் நாம் கேட்ட பாடல், படங்கள், கேம்களை பதிவிறக்கம் செய்து வாங்கலாம். இதற்கு ரூ.10 அல்லது 20தான் வசூலிக்கப்படுகிறது.

தற்போது இந்த மாதிரி கடைகளில் நீல திமிங்கல விளையாட்டையும் ரகசியமாக பதிவிறக்கம் செய்து கொடுக்கிறார்கள். இதற்கு கட்டணம் ரூ.50.

உயிர்களை பலிவாங்கும் நீலதிமிங்கல விளையாட்டை முடக்க வேண்டும் என்று நாடு முழுவதும் குரல் எழுந்துள்ளது. இந்த நிலையில் கோர்ட்டும் தடை விதித்துள்ளது.

எனவே இந்த விளையாட்டை பதிவிறக்கம் செய்து கொடுப்பவர்கள், ஷேர் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.