புதுடெல்லி:
டெல்லியில் வசித்துவரும் பார்வையற்ற ஒரு பெண்ணின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த தம்பதியருக்கு ஆறு வயதில் ஒரு மகள் இருந்த நிலையில் தனது கணவரின் மரணம் தற்கொலை அல்ல.., படுகொலையாக இருக்கலாம் என்று அந்தப் பெண் சந்தேகித்தார். இதையடுத்து, இவ்விவகாரத்தை சட்டரீதியாக அணுகுவதற்காக இலவசமாக சட்ட ஆலோசனை அளிக்கக்கூடிய வழக்கறிஞர் ஒருவரை அவர் தேடினார்.
அப்போது, அந்தப் பெண்ணின் நண்பர் ஒருவர் பொதுத்துறை வங்கி ஒன்றில் பயிற்சி அதிகாரியாக பணியாற்றிவந்த சவுரப் கபூர்(33) என்பவரை அந்தப் பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சவுரப் கபூரும் பார்வையற்றவர் என்பதால் அந்தப் பெண்ணுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டானது.
டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் வசித்துவரும் சவுரப், தனக்கு சட்ட நிபுணர்கள் பலரை தெரியும் என்றும், ஒரு வக்கீலை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் கூறி கடந்த 30-5-2015 அன்று அவரை குருகிராம் (பழைய குர்கான்) நகருக்கு அழைத்து சென்றார்.
ஆனால், வக்கீலிடம் அழைத்து செல்லாமல் குருகிராம் நகரில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து சென்று தங்கவைத்து, அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, தனது காம இச்சைக்கு சவுரப் பயன்படுத்தி கொண்டார்.
டெல்லிக்கு திரும்பிய பின்னரும், தொடர்ந்து ஐந்து மாதங்கள்வரை மீண்டும் மீண்டும் தனது ஆசைக்கு அந்தப் பெண்ணை பயன்படுத்திகொண்ட சவுரப், அவரிடம் இருந்து பல சந்தர்பங்களில் பணமும் வாங்கியுள்ளார். அதற்கு பின்னர் அவரை நிராகரித்துவிட்ட சவுரப் மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பதற்காக பார்வையற்றோருக்கு உதவும் ஒரு தொண்டு நிறுவனத்தை பாதிக்கப்பட்ட பெண் அணுகினார்.
அங்குள்ள பாத்திமா கபிர் என்பவர் உதவியால் டெல்லி மியான்வாலி போலீஸ் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் சவுரப் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது, டிசம்பர் மாதம் அவரை கைது செய்த போலீசார், அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் இருவருமே பார்வையற்றவரகளாக இருப்பதால் இந்த வழக்கில் தேவையான சாட்சி மற்றும் சாட்சியங்களை நிரூபிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது.
சவுரப்புக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையில் நடைபெற்றுவந்த கைபேசி அழைப்பு விபரங்கள், மருத்துவ பரிசோதனை மற்றும் தடயவியல் துறை அறிக்கைகள், அவர்கள் குருகிராம் நகரில் தங்கி இருந்த விடுதியின் பதிவேடுகள் ஆகியவை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
எனினும், அந்தப் பெண்ணை கற்பழிப்பத்தது சவுரப் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது குரலை வைத்து அடையாளம் காட்ட அனுமதி வழங்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடன் அனுமதி பெற்றார். அதன் பின்னர், பார்வையற்ற சவுரப் கோர்ட்டில் பேசிய குரலை கேட்டு, தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி, மோசம் செய்தவர் இவர்தான், என பார்வையிழந்த அந்தப் பெண் அடையாளம் காட்டினார்.
இதையடுத்து, இவ்வழக்கில் சவுரப் கபூரை குற்றவாளி என தீர்மானித்த நீதிபதி, அவருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை தொடர்பான வாதப் பிரதிவாதத்தை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.