கொழிஞ்சாம்பாறை:
கேரளாவில் வீடுகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நீலேஸ்வரம், சிறுவத்தூர் உள்ளிட்ட நகரங்கள் உள்ளது. இங்குள்ள குறிப்பிட்ட சில வீடுகளில் உள்ள ஜன்னல்களில் நேற்று காலை முதல் மாலை வரை கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர்கள் காசர்கோடு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.நீலேஸ்வரம், சிறுவத்தூர் பகுதிகளில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாட்டம் உள்ளது.
இக்கும்பல் தான் வீட்டின் ஜன்னல்களில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டிய வீட்டில் குழந்தைகள் உள்ளது என அடையாளம் தெரியவே இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே நீலேஸ்வரம், சிறுவத்தூர் பகுதியில் அடிக்கடி கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிஇருந்தனர்.
இந்த நிலையில் குழந்தை கடத்தல் கும்பல் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.