திண்டுக்கல்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்கான நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவது என்றும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்களது கட்சியினருக்கு உத்தரவிட்டு இருந்தனர்.
அதன்படி திண்டுக்கல்லில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் கருப்புக் கொடி கட்டப்பட்டது. இதே போல் தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளிலும் கருப்புக் கொடி கட்டியிருந்தனர். மேலும் தி.மு.க. மற்றும் எதிர்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மார்க்கெட் மற்றும் தி.மு.க.வினரின் வர்த்தக நிறுவனங்களிலும் கருப்புக் கொடி கட்டப்பட்டு இருந்தது. திண்டுக்கல், கொடைரோடு, சின்னாளப்பட்டி, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, கொடைக்கானல், பழனி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க. நிர்வாகிகள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.