செய்திகள்

பா.ஜ.க. ராஜ்யசபை உறுப்பினராக வினய் டெண்டுல்கர் பதவி ஏற்றார்

கோவா சட்டசபையில் இருந்து பா.ஜ.க. பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வினய் டெண்டுல்கர் இன்று பதவி ஏற்றார்.

மாலை மலர்

புதுடெல்லி:

கோவாவில் உள்ள ஒரு மாநிலங்களவை தொகுதி உறுப்பினராக கடந்த 2011-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸின் சந்தாராம் நாயக்கின் பதவி காலம் கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. எனவே, அடுத்த உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி சார்பாக ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சந்தாராம் நாயக் நிறுத்தப்பட்டார். பா.ஜ.க. சார்பாக அக்கட்சியின் மாநில தலைவரான வினய் டெண்டுல்கர் போட்டியிட்டார்.

மொத்தம் 38 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வாக்குகளை பதிவிட்டனர். அன்று மாலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 வாக்குகள் பெற்று வினய் டெண்டுல்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட சந்தாராம் நாயக் 16 வாக்குகள் பெற்றார்.

இந்நிலையில், இன்று பாராளுமன்ற மேல்சபைக்கு வந்த வினய் டெண்டுல்கர் இன்று பதவி ஏற்றார். அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்த ராஜ்யசபை சபாநாயகரும், துணை ஜனாதிபதியுமான ஹமித் அன்சாரி, கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.