செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் சம்பளம் பெறமாட்டார்கள் - அனந்தகுமார்

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் எந்த வேலையும் நடைபெறாததால் தே.ஜ.கூட்டணி எம்.பிக்கள் 23 நாள்களுக்கான சம்பளத்தை பெறமாட்டார்கள் என மத்திய மந்திரி அனந்த்குமார் தெரிவித்துள்ளார். #parliament #rajyasabha

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி. வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. அமளியை காரணம் காட்டி, மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கிய அமர்வு ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் எந்த வேலையும் நடைபெறாததால் தே.ஜ.கூட்டணி எம்.பிக்கள் 23 நாள்களுக்கான சம்பளத்தை பெறமாட்டார்கள் என மத்திய மந்திரி அனந்த்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய மந்திரி அனந்த்குமார் கூறுகையில், பாராளுமன்றத்தின் இந்த அமர்வில் 23 நாள்களுக்கான சம்பளத்தை பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்.பிக்கள் பெறமாட்டார்கள்.

பாராளுமன்றத்தில் மக்கள் பணியாற்றுவதற்காகத்தான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், பாராளுமன்றத்தில் எந்த பணியும் நடைபெறாததால் அதற்கான சம்பளத்தை நாங்கள் பெறபோவதில்லை. அது மக்களின் பணம் என்பதால் அதை தொட எங்களுக்கு உரிமை இல்லை.

காங்கிரஸ் ஜனநாயகம் அற்ற முறையில் பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையை முடக்கி வருகிறது. நாங்கள் எந்த பிரச்சனை குறித்தும் பேச தயாராக உள்ளோம். ஆனால் அவர்கள் அவையை செயல்பட விடாமல் முடக்கி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். #parliament #rajyasabha #tamilnews 

SCROLL FOR NEXT