கோப்புபடம் 
செய்திகள்

இ-பாஸ் முறையை எளிமையாக்க கோரி சேலத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

இ-பாஸ் முறையை எளிமையாக்க கோரி சேலத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாலை மலர்

சேலம்:

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் செல்ல கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த இ-பாஸ் வாங்குவதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள், வணிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் இ-பாஸ் முறையை எளிமையாக்க கோரி நேற்று சேலம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட பார்வையாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும், அரசு அனுமதிக்கும் நேரத்திற்கு முன்பு கடைகளை அடைக்க வற்புறுத்தும் அதிகாரிகளை கண்டிக்க வேண்டும், மத்திய அரசு லாரி போக்குவரத்து நிறுவனங்களின் செயல்பாட்டிற்கு அனுமதி வழங்கி உள்ள 24 மணி நேர வேலைநேரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை கண்டிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதுகுறித்து மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு கூறும்போது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இ-பாஸ் முறை இல்லை. எனவே தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு கூட வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இ-பாஸ் முறையை ரத்து செய்யவில்லை என்றால் நாளை (இன்று) முதல் தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்த உள்ளனர், என்று கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவகுமார், செல்வராஜ், துணை தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.