செய்திகள்

மக்கள் பிரச்சினைகளை மந்திரங்களால் தீர்க்க முடியும் என பா.ஜ.க. நம்புகிறது: அகிலேஷ் குற்றச்சாட்டு

மக்கள் பிரச்சினைகளை மந்திரங்களால் தீர்க்க முடியும் என பா.ஜ.க. அரசு நம்புவதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ நகரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்தியது. ஆனால் இந்த நடவடிக்கைகள் மக்கள் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு பெரிய வணிகர்களுக்கே நன்மை பயப்பதாக உள்ளது.

மந்திரங்களை சொல்வதால் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. நினைக்கிறது. ஆனால், அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உண்மையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை.

அரசியல் ஆதாயத்துக்காக பொய் சொல்வது அதிகரித்து வருகிறது என பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது. பா.ஜ.க.வின் குற்றச்சாட்டுக்கு எங்கள் கட்சி தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. முந்தைய அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசு தொடரவில்லை. அந்த திட்டங்களில் சமாஜ்வாடி என்ற பெயர் இருப்பதே அதற்கு காரணம்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எல்லை மீறி போய்விட்டது. எத்தனை குற்றவாளிகள் மற்றும் மணல் மாபியா கும்பலை சேர்ந்தவர்களை மாநில அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது? அவர்களுக்கு எதிராக யோகி ஆதித்யாநாத் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.