புதுடெல்லி:
குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா தலைநகர் டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமையகத்துக்கு இன்று பிற்பகல் வந்தார். அவரது காரின் மீது மலர்களை தூவி பா.ஜ.க. தொண்டரகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்றுகொண்ட அமித் ஷா பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இரு மாநில தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே நெருக்கமான போட்டி நிலவுவதாக இன்று காலை வெளியான சில செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்த அமித் ஷா, 8 சதவீதம் வாக்குவங்கி வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பதை நெருக்கமான போட்டியாக கருத முடியாது என்று தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் கிடைத்துள்ள வெற்றி பிரதமர் மோடியின் செல்வாக்குக்கும் மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றிய மக்கள் நல பணிகளுக்கும் கிடைத்ததாகும் என குறிப்பிட்ட அமித் ஷா, குஜராத் மாநிலத்தில் கிடைத்துள்ள வெற்றியானது சாதி மற்றும் வாரிசு அரசியலுக்கு எதிரான பிரதமர் மோடியின் நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என்றார்.