பெங்களூரு:
குஜராத் மாநிலத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் அதிரடியாக ராஜினாமா செய்தனர். அதில் 3 பேர் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டனர்.
பா.ஜ.க சார்பில் அமித்ஷா, ஸ்மிரிதி ரானி மற்றும் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த பல்வந்த்சிங் ராஜ்புட் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அமித்ஷ் மற்றும் ஸ்மிரிதி ரானி வெற்றி பெறுவதற்கான சீட்டுகள் ஆளும் பா.ஜ.கவிடம் உள்ளது. ஆனால் மூன்றாவது தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்த் மேலும் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கவும், தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கவும் பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து, குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் அதிரடியாக பெங்களூர் கொண்டு வரப்பட்டு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவை அடுத்த 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் தங்கி உள்ள குஜராத் எம்.எல்.ஏ பரேஷ் தன்னி கூறியதாவது:-
நாங்கள் இங்கு தங்கி இருக்க முழுக்க முழுக்க காரணம் பாரதிய ஜனதா கட்சி தான். குஜராத்தில் பாரதிய ஜனதா நிறைய பணம் கொடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது. அரசு எந்திரத்தை கொண்டும், போலீசாரைக் கொண்டும் எம்.எல்.ஏ.க்களை மிரட்டி வருகிறது. நாங்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறுவது தவறு. நாங்கள் எங்கள் குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம்.
குஜராத் முதல் மந்திரி தேவை இல்லாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் விடுமுறையை கழிப்பதாகவும், குஜராத் வெள்ள நிலவரம் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். இதற்கு காரணம் பாரதிய ஜனதா என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
இதே கருத்தை கியாசுதீன் ஷேக் உள்ளிட்ட பிற எம்.எல்.ஏக்களும் கூறினர்.