செய்திகள்

பா.ஜ.க.வின் வீழ்ச்சியை எந்த சாணக்கியனாலும் தடுக்க முடியாது - சிவசேனா சாபம்

பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 110 இடங்கள் தான் கிடைக்கும் என கூட்டணி கட்சியான சிவசேனா கணித்துள்ளது. #shivsena #bjp #pmmodi #amitshah

மாலை மலர்

மும்பை:

பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 110 இடங்கள் தான் கிடைக்கும் என கூட்டணி கட்சியான சிவசேனா கணித்துள்ளது.

இதுதொடர்பாக, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ள தலையங்க கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பா.ஜ.க.வின் வலிமைமிக்க கோரக்ப்பூர், புல்பூர் இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. முகாமில் கலக்கத்தை உண்டாக்கி விட்டது. மத்தியில் மோடியின் ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற 10 பாராளுமன்ற இடைத்தேர்தல்களில் 9 முறை பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.

மிகச்சிறிய மாநிலமான திரிபுரா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அந்த வெற்றியின் கொண்டாட்டத்தை ருசிக்க முடியாத வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற இரு தொகுதிகள் பாராளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டது.

ஆரம்பத்தில் பா.ஜ.க.வுக்கு 282 பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 272 உறுப்பினர்களாக குறைந்துள்ளது. மோடி மற்றும் அமித் ஷாவின் தலைமையின்கீழ் பா.ஜ.க. ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் 325 இடங்களை பிடித்து பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. 1991-ம் ஆண்டில் இருந்து கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யாநாத் ஒருமுறை கூட வெற்றிபெற தவறியதில்லை.

ஆனால், தற்போது அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக அவர் இருந்தும் அந்த தொகுதியில் அவரது கட்சி தோல்வி அடைந்துள்ளது.

பீகாரின் அராரியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், ஜெஹானாபாத் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வால் முன்பு இருந்ததைபோல் 280 இடங்களை பிடிக்க முடியாது. 100 முதல் 110 இடங்களில்தான் வெற்றி பெறும். நண்பர்களை கைவிட்டு, பொய்யான பாதையில் நடப்பவர்களுக்கு தோல்வி நிச்சயம். வீழ்ச்சி ஆரம்பித்து விட்டால் எந்த சாணக்கியனாலும் அதை தடுக்க முடியாது.

கோரக்பூர் தொகுதி தோல்வி, ஈகோ மற்றும் அகந்தைக்கு கிடைத்த தோல்வியாக கருத வேண்டியுள்ளது.

இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. #tamilnews #shivsena #bjp #pmmodi #amitshah