மதுரை:
பா.ஜனதா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய பெரியார் திராவிட கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பதற்றம் உருவானது.
திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றம் தொடர்பாக பா.ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா கருத்து தெரிவித்தார்.
அப்போது பெரியார் சிலை குறித்து அவதூறாக டுவிட்டரில் அவர் பதிவு செய்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் எச். ராஜாவை கண்டித்ததோடு அவருக்கு எதிராக போராட்டத்திலும் இறங்கின.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் திருபத்தூரில் நேற்று இரவு பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இது திராவிட கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், எச். ராஜாவுக்கு எதிராகவும் இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
மதுரை மேலமடையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட பெரியார் திராவிட கழகத்தினர் கோஷமிட்டபடி திரண்டு வந்தனர்.
மேலமடை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் தடையை மீறி பெரியார் திராவிட கழகத்தினர் பா.ஜனதா அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் திராவிட கழகத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
மக்கள் கலை இலக்கிய கழகத்தினரும், வழக்கறிஞர்களும் மதுரை அவுட்போஸ்டில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மத்திய அரசு மற்றும் எச். ராஜாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்டச் செயலாளர் இன்குலாப் தலைமை தாங்கினார்.
திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலாளர் பாலா, முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டியம்மாள், நிர்வாகி நீலகண்டன் உள்பட 18 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது எச். ராஜாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். #tamilnews