செய்திகள்

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் தங்கி இருப்பது உட்கட்சி விவகாரம்: முரளிதரராவ்

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் தங்கி இருப்பது உட்கட்சி விவகாரம் என பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளிதரராவ் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

மதுரை:

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் காரைக்குடியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், இன்று மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 77 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும் 42 படகுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

தமிழக மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூர், ரிசார்ட் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருப்பது அவர்களது உட்கட்சி விவகாரம் ஆகும். இதில் நான் கருத்து கூறுவதற்கு எதுவும் இல்லை.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக தலைவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசும், தமிழக பா.ஜ.க. தலைவர்களும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.