செய்திகள்

உனாவ் பாலியல் வன்கொடுமை - பா.ஜ.க. எம்.எல்.ஏ.விடம் சி.பி.ஐ தீவிர விசாரணை

உத்தரப்பிரதேசத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரிடம் இன்று சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகின்றனர். #Unnao

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் உனாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகாரளித்திருந்தார். இதனை அடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.

மேற்கண்ட புகார்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். இதற்கிடையே, பழைய வழக்கு ஒன்றில் திடீரென அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது. இதனை அடுத்து எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சிங் செங்காரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலாணாய்வு குழு அமைக்கப்பட்டது.

திடீர் திருப்பமாக வழக்கு சி.பி.ஐ வசம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், குல்தீப் சிங் செங்கார் மீது மூன்று வழக்குகளை பதிவு செய்த சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலை அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். அவர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. #Unnao #TamilNews