லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகாரளித்திருந்தார். இதனை அடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.
மேற்கண்ட புகார்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று முன்தினம் அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். இதற்கிடையே, பழைய வழக்கு ஒன்றில் திடீரென அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்தார்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது. இந்நிலையில், எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சிங் செங்காரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்த போலீசார், இது தொடர்பாக வேறு ஆதாரங்களையும் பதிவு செய்வதாக கூறினர். #TamilNews