மும்பை:
சிவசேனாவை விட்டு விலக 5 கோடி ரூபாய் தருவதாக பா.ஜ.க. மந்திரி என்னிடம் பேரம் பேசினார் என எம்.எல்.ஏ. ஹர்ஷவர்தன் ஜாதவ் புகார் தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலம் கன்னாட் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஹர்ஷவர்தன் ஜாதவ். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் பா.ஜ.க. மந்திரி சந்திரகாந்த் பாட்டீலை கடந்த மாதம் அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது கட்சியை விட்டு விலகி வந்தால் 5 கோடி ரூபாய் தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும். இதேபோல் மற்ற சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கும் 5 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
ஆனால், சிவசேனா எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டை பா.ஜ.க. மறுத்துள்ளது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதுபோன்ற நடவடிக்கைகளில் பா.ஜ.க. ஈடுபடுவதில்லை எனக்கூறினர்.
கட்சியை விட்டு விலக பா.ஜ.க. மந்திரி 5 கோடி ரூபாய் தருவதாக சிவசேனா எம்.எல்.ஏ. கூறிய குற்றச்ச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.