ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30ம் தேதி முதல் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 30, டிசம்பர் 7, 12,16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சிக்கான தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று வெளியிட்டார்.
அதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
* வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களிலும் குறைந்தது ஒருவருக்காவது வேலைவாய்ப்பு அளிக்கப்படும்
* இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
* 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 2,200 , 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.7,500 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
* பழங்குடி பெண்கள் நடத்தும் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.