செய்திகள்

எம்.பி. இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா 10 இடங்களை இழந்தது

2014-ம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் நடந்த 22 எம்.பி. தேர்தல்களில் பத்து தொகுதிகளை தொடர்ச்சியாக பாரதிய ஜனதா இழந்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை அமைத்தது. வருகிற மே மாதத்துடன் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து 4 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்த 4 ஆண்டுகளில் பாரதிய ஜனதா அடுத்தடுத்து தேர்தலில் வெற்றியையும், தோல்வியையும் மாறி மாறி சந்தித்து வருகிறது.

2014-ம் ஆண்டுக்கு பிறகு நாடு முழுவதும் 22 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்துள்ளது. இதில் 12 தொகுதிகளை பா.ஜ.க. தக்க வைத்துள்ளது. 10 தொகுதிகளை பா.ஜ.க. இழந்துள்ளது.

இந்த 10 தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி கடந்த 2 ஆண்டுகளில் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள தொடர் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த 10 தொகுதிகள் விவரம் வருமாறு:- அமிர்தசரஸ், ஸ்ரீநகர், மலைப்புரம், குர்தாஸ்பூர், அஜ்மீர், ஆள்வார, உலுபெரியா, கோரக்பூர், பல்பூர், அராரியா

10 எம்.பி. தொகுதிகளை அடுத்தடுத்து இடைத்தேர்தல்களில் இழந்துள்ள போதிலும் பா.ஜ.க.வுக்கு நேற்று ஏற்பட்ட 3 தொகுதி தோல்விதான் பேரிடியாக மாறியுள்ளது.

இந்த 3 தொகுதிகளும் உத்தரபிரதேசம், பீகாரில் அமைந்துள்ளதால் அது 2019-ம் ஆண்டு பொது தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற பயம், அதிர்ச்சி பா.ஜ.க. தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை பாராளுமன்ற இடைத்தேர்தலில் 4-ல் 3 சதவீதம் தோல்வியை பா.ஜ.க. சந்தித்துள்ளது. இதனால் பா.ஜ.க.வுக்கு தேசிய அளவில் செல்வாக்கு சரிந்து விட்டதாக தோற்றம் உருவாகி இருக்கிறது. இதை சரிகட்ட பா.ஜ.க. தலைவர்கள் என்ன செய்வது என்று ஆலோசனை தொடங்கி உள்ளனர்.

இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து தோல்விகளை தழுவி வருவதால் பாராளுமன்றத்தில் அந்த கட்சிக்கான பலம் குறைந்து வருகிறது. 2014-ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.க. 282 இடங்களை பெற்று இருந்தது.

தற்போது பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு 273 எம்.பி.க்களே உள்ளனர். 5 இடங்கள் காலியாக உள்ளன.