வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.
இந்த 3 மாநிலங்களும் தலா 60 சட்டசபை தொகுதிகள் கொண்டவை. 3 மாநிலங்களிலும் வேட்பாளர் மரணம் உள்ளிட்ட காரணங்களால் தலா 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
இன்று காலை 8 மணிக்கு இந்த மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடங்கியது.
இதில் திரிபுரா, நாகலாந்தில் பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் நிலையில் உள்ளது.
திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.
கடந்த தேர்தலில் 49 இடங்களைக் கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இன்று காலை தொடங்கிய ஓட்டு எண்ணிக்கையில் இழுப்பறி நிலையில் இருந்து வந்தது.
தொடக்கத்தில் ஆட்சி அமைக்க தேவையான 30 இடங்களை தாண்டி முன்னணி வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு பா.ஜனதா நெருக்குதல் கொடுத்து பின்னுக்கு தள்ளியது.
காலை 10.30 மணி நிலவரப்படி பா.ஜனதா 36 இடங்களிலும், கம்யூனிஸ்டு 26 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. தொடர்ந்து பா.ஜனதா முன்னணி வகித்து வருவதால் அந்த கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திரிபுரா சட்டசபையில் கடந்த முறை ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத பா.ஜனதா இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய வகையில் அதிக இடங்களில் முன்னணி வகிக்கிறது. அங்கு கம்யூனிஸ்டு கோட்டையில் சரிவு ஏற்பட்டு பா.ஜனதா செல்வாக்கு அதிகரித்து வருவதையே இந்த தேர்தல் காட்டுகிறது.
மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு முகுல் சங்மா முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார்.
இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் அங்கு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடிய வகையில் அதிக தொகுதியில் முன்னணி வகித்து வருகிறது.
முன்னணி விவரம் வெளியான 58 தொகுதிகளில் காங்கிரஸ் 24 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி 10 இடங்களிலும், பா.ஜனதா 5 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 14 இடங்களிலும் முன்னணி வகித்து வருகிறது.
நாகலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியைச் சேர்ந்த டி.ஆர்.ஜீலியாங் முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார்.
இந்த தேர்தலில் தொடக்கத்தில் அந்த கட்சியே அதிக இடங்களில் முன்னணியில் இருந்தது. அதற்கு அடுத்தபடியாக பழைய கூட்டணியான பா.ஜனதா 2-வது இடத்தில் இருந்தது. ஆனால் 10.30 மணி நிலவரப்படி பா.ஜனதா 32 இடங்களில் முன்னணியில் இருந்து வருகிறது. நாகா மக்கள் முன்னணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கும் பா.ஜனதா கட்சியே ஆட்சியைப் பிடிக்கிறது.