செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. திட்டியதால் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கண்ணீர்

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ., ஐ.பி.எஸ். அதிகாரி எனவும் பாராமல் சாரு நிகமை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அவர் சத்தம் போட்டு கத்தியதால் அதிர்ச்சியடைந்த சாரு நிகமின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

கோரக்பூர்:

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பாராளுமன்ற தொகுதியான கோரக்பூருக்கு உட்பட்ட கரீம்நகரில் ஒரு மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரு நிகம் மற்றும் போலீசார், வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.

சிறிது நேரத்துக்குப்பின் உள்ளூர் பா.ஜனதா எம்.எல்.ஏ.வான ராதாமோகன் தாஸ் அகர்வால் சம்பவ இடத்துக்கு வந்தார். அப்போது அவரிடம், போலீசார் 80 வயது முதியவர் ஒருவரை இழுத்து சென்றதாகவும், பெண் ஒருவரை தாக்கியதாவும் போராட்டக்காரர்கள் புகார் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., ஐ.பி.எஸ். அதிகாரி எனவும் பாராமல் சாரு நிகமை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அவர் சத்தம் போட்டு கத்தியதால் அதிர்ச்சியடைந்த சாரு நிகமின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அதை அவர் கைக்குட்டை மூலம் துடைத்தார். இந்த காட்சி உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜனதா எம்.எல்.ஏ. தன்னை அவமதித்ததாகவும், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சாரு நிகம் கூறியுள்ளார். எனினும் தான் அழவில்லை என்று கூறியுள்ள சாரு நிகம், எம்.எல்.ஏ.வுடனான வார்த்தை மோதலின் போது தனது உயர் அதிகாரி தனக்கு ஆதரவாக இருந்ததால் உணர்ச்சி வசப்பட்டதாக தெரிவித்துள்ளார்.