போபால்:
மத்தியபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வருகிறது. 15 ஆண்டுகள் அங்கு ஆட்சியில் இருந்த பா.ஜனதா தற்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 114 தொகுதியில் வெற்றி பெற்று பா.ஜனதாவுக்கு 109 இடங்கள் கிடைத்தது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 தொகுதியும், சமாஜ்வாடி ஒரு இடத்திலும் சுயேட்சைகள் 4 பேரும் வெற்றிபெற்றனர்.
சுயேட்சைகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வரானார். இடைத் தேர்தல் வெற்றியால் காங்கிரஸ் பலம் 115 ஆக அதிகரித்தது. பா.ஜனதாவின் எண்ணிக்கை 108 ஆக குறைந்தது.
இதற்கிடையே கமல்நாத்தின் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதித் திட்டம் தீட்டுவதாக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலை வருமான திக்விஜய்சிங் குற்றம் சாட்டி இருந்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களை இழுக்க ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை பேரம் நடைபெறுவதாக அவர் புகார் கூறி இருந்தார். பா.ஜனதாவினர் பேரம் பேசியவதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். திக்விஜய் சிங்கின் இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்து இருந்தது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் நள்ளிரவில் கடத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேர் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ஆக 8 எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டு உள்ளனர்.
திக்விஜய்சிங் குற்றம் சாட்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டது மத்தியபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய பிரதேச கல்வித்துறை மந்திரி ஜிதுபட்வாரி கூறியதாவது:-
ஆட்சியை கவிழ்க்கும் சதி திட்டத்துடன் எங்களுக்கு ஆதரவான 8 எம்.எல்.ஏ.க் களை முன்னாள் முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடத்தி சென்றுள்ளனர். பா.ஜனதா எங்களை சட்ட விரோதமாக சிறை வைத்துள்ளதாக எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வர நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரசின் இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா மீண்டும் நிராகரித்துள்ளது. இதற்கிடையே கடத்தப்பட்டதாக கூறப்படும்8 எம்.எல். ஏ.க்களில் 4 பேர் அரியான மாநிலம் குர்ரேகானில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஓட்டலில் தங்களது எம்.எல்.ஏ.க்களை சிறை வைத்துள்ளதாக காங்கிரஸ் புகார் கூறி உள்ளது.
இதேபோல பா.ஜனதா ஆட்சி நடக்கும் மற்றொரு மாநிலமான கர்நாடகாவில் உள்ள விடுதியில் 4 எம்.எல். ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
8 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா முயன்று வருவதால் மத்திய பிரதேசத்தில் கமல்நாத்தின் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நட்சத்திர ஓட்டலில் கடத்தி வைத்துள்ள தங்கள் எம்.எல்.ஏ.க்களை மீட்க காங்கிரஸ் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.