செய்திகள்

அ.தி.மு.க. இணைப்பு: பா.ஜனதா கட்ட பஞ்சாயத்து செய்யவில்லை - தமிழிசை சவுந்தரராஜன்

அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பில் பா.ஜனதா கட்ட பஞ்சாயத்து செய்ய எந்த அவசியமும் இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

மாலை மலர்

வில்லிவாக்கம்:

பாரதீய ஜனதா காஞ்சி கோட்டம் சார்பில் ஜி.எஸ்.டி. வரி குறித்த கருத்தரங்கம் அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று கூறுகிறார். அதேபோல் அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பத்துக்கும் பா.ஜனதா காரணம் என்று கூறுகிறார்.

இன்னும் சொல்லப் போனால் முரசொலி பவள விழா மழையால் ரத்து செய்யப்பட்டதற்கும் பா.ஜனதான் காரணம் என்று கூறுவார்.

மு.க.ஸ்டாலின் தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அது அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 22-ந்தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த சுற்றுப்பயணம் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பில் பா.ஜனதா கட்ட பஞ்சாயத்து செய்கிறது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். பா.ஜனதாவுக்கு கட்ட பஞ்சாயத்து செய்ய எந்த அவசியமும் இல்லை.

ஜி.எஸ்.டி. வரியால் பொருளாதாரம் உயர்ந்து இருக்கிறது. இது பொருளாதார சுதந்திரம் ஆகும். ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பிறகு வரி செலுத்தாத 6 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்து முறையாக வரி செலுத்துகின்றனர். 24 மாநிலங்களில் சோனைச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. ஜி.எஸ்டி. வரி குறித்து எதிர்க்கட்சிகள் திசை மக்களை திசை திருப்புகிறார்கள்.

அன்புமணி ராமதாஸ், செங்கோட்டையனை விவாதத்துக்கு அழைக்கிறார். அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். ஆனால் அவர் பாராளுமன்றத்துக்கு குறைந்த நாளே வந்துள்ளார். குறைந்த அளவிலேயே கேள்விகள் கேட்டுள்ளார். அவர் விவாதத்துக்கு அழைக்க தகுதி இல்லாதவர்.

இவ்வாறு அவர் கூறினார்.