லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில் கிடைக்கும் தோல்வி, பா.ஜ.க.வை மத்தியில் இருந்து வீட்டுக்கு அனுப்பும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் தேர்தல் நடத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. 438 நகராட்சிகள், 202 பஞ்சாயத்து மற்றும் 16 மாநகராட்சி இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் சுமார் 3 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் அயோத்யா நகர் மற்றும் மதுரா-பிருந்தாவன் நகர் ஆகிய இரு இடங்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளன.
அதன்படி, உள்ளாட்சி தேர்தல் நவம்பர் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வுக்கு இந்த உள்ளாட்சி தேர்தலில் கடும் சவால்கள் காத்திருக்கின்றன.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெறும். பா.ஜ.க. கடும் தோல்வியை சந்திக்கும். உள்ளாட்சி தேர்தலில் கிடைக்கும் தோல்வியால் 2019-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் இருந்து பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்பும் விதமாக அமையும்.
முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து 7 மாதங்களாகியும் மாநிலத்துக்கு எதையுமே
செய்யவில்லை. சமாஜ்வாடி கட்சி செய்துள்ள சாதனைகளுடன் ஒப்பிடும்போது, பாஜக ஒன்றுமே சாதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.