செய்திகள்

அமித்ஷா மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு: தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் பா.ஜ.க. புகார்

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் பா.ஜ.க. புகார் அளித்துள்ளது.

சென்னை:

பா.ஜ.க. தேசிய இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம், மாநில இளைஞரணி தலைவர் செல்வம் ஆகியோர் சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அங்கு புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவை மரண வழக்குகளில் சம்பந்தப்படுத்தி, உண்மைக்கு புறம்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பியூஸ் மனுஷ் என்பவர் உள்நோக்கத்துடன் இதுபோன்று அவதூறு தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறார்.

இது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தவறான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக பியூஸ் மனுஷ் கைதாகி சிறைக்கு சென்று இருக்கிறார்.

தற்போது எங்கள் கட்சியின் தேசிய தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான கருத்துகளை பதிவிட்டு இருக்கிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் அமித்ஷா மீது பியூஸ் மனுஷ் பதிவிட்டிருந்த கருத்துகளையும் புகார் மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தது. இது புகார் மனு தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.