கொஹிமா:
நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க 12 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 27 இடங்களிலும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. எந்த கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காததால், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க பா.ஜ.க முடிவு செய்தது.
ஆனால், நாகா மக்கள் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளதால் தங்களை ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளது. இதனால், அங்கு ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பா.ஜ.க சார்பில் சுருஹுடோ தொகுதியில் போட்டியிட்டு வென்ற கெஹோவி தனது வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.
தனது வீட்டு மாடியின் பால்கனியில் நின்று கொண்டு பணக்கட்டுகளை கீழே வீசி தனது வெற்றியை கெஹோவி கொண்டாடினார். வெளியே நின்ற அவரது ஆதரவாளர்கள் ரூபாய் நோட்டுகளை பிடிக்க போட்டி போட்டுக்கொண்டு ஓடினர்.
52 வயதான கெஹோவி அரசு அதிகாரியாக இருந்து, பின்னர் தொழிலதிபராக உருவெடுத்து கோடீஸ்வரராக அவதாரமெடுத்து அரசியலில் குதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.