செய்திகள்

பா.ஜனதா - புதிய தமிழகம் கட்சியினர் மிரட்டி வருகிறார்கள்: குறும்பட இயக்குனர் திவ்யபாரதி

பா.ஜனதா கட்சியினர் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் தொலைபேசி மூலம் தன்னை மிரட்டி வருவதாக குறும்பட இயக்குனர் திவ்யபாரதி கூறியுள்ளார்.

மாலை மலர்

மதுரை:

மதுரை ஆனையூரை சேர்ந்தவர் திவ்யபாரதி. லெனினிஸ்டு இயக்கத்தை சேர்ந்த இவர், குறும்பட இயக்குனராகவும் உள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர் சுரேஷ் என்பவர் பாம்பு கடித்து உயிர் இழந்தார். இவருக்கு நஷ்டஈடு கேட்டு, திவ்யபாரதி உள்பட சிலர் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தியதாக கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு உடனடி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திவ்ய பாரதி இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக எனக்கு, பல ஊர்களில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதில் என்னை ஒரு பெண் என்றும் பாராமால் இழிவாக பேசுகிறார்கள். நான் இயக்கிய “கக்கூஸ்” என்ற குறும்படம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதனை தவறாக புரிந்து கொண்டு ஒரு தனிப்பட்ட சமுதாயத்தை இழிவாக பேசுவதாக கூறி என்னை தொலைபேசியின் மூலமாக மிரட்டியும் இழிவாக பேசியும் வருகிறார்கள்.

மிரட்டுபவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் என்று சொல்லி வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அறிவுரையை டாக்டர் கிருஷ்ணசாமி வழங்க வேண்டும்.

கக்கூஸ் குறும்படத்தை தடுத்து நிறுத்த நீதிமன்றம் வரை கிருஷ்ணசாமி செல்ல போவதாக தகவல் வந்துள்ளது. அவர் உடனே அந்த முடிவை கைவிட வேண்டும்.

மிரட்டல்கள் வந்த அழைப்பை சோதனை செய்தால் பா.ஜனதாவில் உள்ளவர்களின் பெயர் வருகிறது. அதை உடனே காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்.

தென்காசி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது.வெளிநாடுகளிலிருந்தும் வருகிறது. நான் போகும் இடம் எல்லாம் என்னை பின் தொடரவும் செய்கின்றனர்.

அதிக அழைப்புகள் பா.ஜனதா கட்சியில் உள்ளவர்கள் மூலமாகவே வருகிறது. அடுத்து மாட்டிறைச்சி சம்பந்தபட்ட குறும்படம் இயக்க உள்ளேன். அதற்கான அச்சுறுத்தலின் அடித்தளமே இது என பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.