செய்திகள்

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜ.க.- காங்கிரஸ் போராட்டம்

டெல்லியில் ரேசன் முறைகேடு நடந்ததாக கூறி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

டெல்லி சட்டசபையில் 2016-17ம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொது விநியோக திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ரேசன் கடைகளுக்கு உணவுப்பொருட்கள் ஏற்றிச்சென்ற 8 வாகனங்கள் பஸ், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், மூன்று சக்கர வாகனங்களின் பதிவெண்களுடன் இயங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் டெல்லி அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று டெல்லி முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

இந்நிலையில், ரேசன் விநியோகத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் இன்று போராட்டத்தில் குதித்தனர். முதல்வர் கெஜ்ரிவால் வீட்டிற்கு வெளியே ஏராளமானோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கெஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக் காரர்களை கலைந்துசெல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், கலைந்து செல்லவில்லை. இதையடுத்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து கூட்டத்தை கலைத்தனர். போராட்டம் நடத்திய முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.