செய்திகள்

தேர்தல் முடிவு பற்றி பா.ஜனதா- காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

நாட்டில் மூன்று மிகப்பெரிய புரட்சிகளை செய்து வெற்றி பெற்று இருக்கிறார் பிரதமர் மோடி. பண மதிப்பிழப்பு நடவடிக்கை வந்ததும் முடிந்தது பா.ஜனதா என்றார்கள். ஆனால் அதற்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றது.

ஜி.எஸ்.டி. அறிவிக்கப்பட்டதும் இனி பா.ஜனதாவால் எழவே முடியாது என்றார்கள். இப்போது வீறு கொண்டு எழுந்து நிற்கிறது.

ஜி.எஸ்.டி என்பது மக்களுக்கான திட்டம். அரசியல்வாதிகளும், கொள்ளையடித்தவர்களும் எதிர்க்கத்தான் செய்வார்கள் என்றார் மோடி. மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

21 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது சாதாரண வி‌ஷயமல்ல.

காங்கிரஸ் செய்த சாதி அரசியலுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்து இருக்கிறார்கள். மாற்றத்தை கொண்டு வரப்போவதாக ராகுல் பிரசாரம் செய்தார். காங்கிரஸ் நேற்று தொடங்கப்பட்ட கட்சி அல்ல. நூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கட்சி. பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள்? எதிர்கட்சிகளே இல்லாமல் ஆட்சி செய்தார்கள். அப்படி இருந்தும் என்ன மாற்றத்தை தந்தார்கள்.

நாட்டை சுத்தப்படுத்த கழிப்பறை கட்டகூட புதிதாக ஒரு பிரதமர் வரவேண்டிய நிலைதான் இருந்தது.

இத்தனை ஆண்டுகள் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். அதை மக்கள் புரிந்து கொண்டார்கள். இனி நாட்டை காக்க பா.ஜனதாவால் தான் முடியும் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். மோடியின் தலைமை மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதனால்தான் குஜராத் வெற்றி மட்டுமல்ல காங்கிரஸ் கையில் இருந்த இமாச்சல பிரதேசத்தையும் பிடுங்கி மோடி கையில் கொடுத்து இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

குஜராத் மோடியின் சொந்த மாநிலம். இந்தியாவின்  சிறந்த மாநிலம். அதானி போன்றவர்கள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலம். காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றார்கள். சாம, பேத, தான, தண்ட யுக்தி அனைத்தையும் கையாண்டார்கள். அப்படி இருந்தாலும் பா.ஜனதா பல இடங்களை இழந்து இருப்பதும், காங்கிரஸ் கூடுதலான இடங்களை கைப்பற்றி இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மோடியின் செல்வாக்கு குறைந்து இருப்பதையே தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகிறது.

இமாச்சல பிரதேசம் மிகச்சிறிய மாநிலம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. எனவே ஆட்சியில் இருக்கும் கட்சி மீது அதிருப்தி ஏற்படும். அந்த வகையில் இமாச்சல பிரதேச முடிவு அமைந்துள்ளது.

ஆனால் மக்கள் எதிர்பார்ப்பு குஜராத் மீதுதான் இருந்தது. அங்கு காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள ஏற்றமும், முன்னேற்றமும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் நிறைந்த மாநிலம் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெறுவோம்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.