புதுடெல்லி:
பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று இப்போது வெளிவந்துள்ள ஆய்வில் தெரியவந்தது.
இதுசம்பந்தமாக அமெரிக்காவில் உள்ள ஆர்ப்மீடியா என்ற பத்திரிகையாளர் அமைப்பு நியூயார்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வு செய்துள்ளது. நியூயார்க் பல்கலைக்கழக மைக்ரோ பிளாஸ்டிக் ஆய்வு பேராசிரியர் ஷெர்ரிமேசன் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
பாட்டிலில் உள்ள தண்ணீரை 1.5 மைக்ரான் அதாவது 0.0015 மில்லி மீட்டர் அளவு துவாரம் கொண்ட வடிகட்டி மூலம் வடித்தெடுத்து பின்னர் அந்த வடிகட்டியில் தேங்கியுள்ள பொருட்களை ஆய்வு செய்தார்கள். மைக்ரோஸ்கோப் மற்றும் இன்ப்ரா ரெட் பரிசோதனை மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதில் ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் ரசாயன துகள்கள் இருந்து தெரியவந்தது.
அதாவது பாலிபுரோப்லின், நைலான், பாலித்தீன், டெரபதலேட் (பெட்) துகள்கள் அந்த வடிகட்டியில் தேங்கி இருந்தன. அதாவது தண்ணீருக்குள் இந்த துகள்கள் கலந்து இருந்தன.
உலகம் முழுவதும் உள்ள 11 முன்னணி நிறுவனங்களின் 250 குடிநீர் பாட்டில்களை ஆய்வுக்கு எடுத்து அவற்றை பரிசோதித்துள்ளனர். அதில் இந்தியாவில் இருந்து பிஸ்லரி குடிநீர் பாட்டிலும் சோதனைக்கு எடுக்கப்பட்டது.
இதையடுத்து, பிஸ்லரி நிறுவனம் சார்பாக இன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 'மக்களின் பாதுகாப்பு தான் எங்கள் நிறுவனத்திற்கு முக்கியம். பிஸ்லரி நிறுவனம் தயாரிக்கும் அனைத்து பொருட்களும் தரமான ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்யப்படும். பி.ஐ.எஸ். மற்றும் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கு கீழ் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே பொருள்கள் விற்பனைக்கு வரும்.
முக்கியமாக பிஸ்லரி தண்ணீர் 10 முறை சுத்திகரிக்கப்பட்ட பிறகே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கிறது என வெளியிட்டப்பட்ட ஆய்வறிக்கை குறித்து தற்போது விசாரணை செய்து வருகிறோம்' என அந்நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சவுகான் குறிப்பிட்டிருந்தார். #bisleri #plasticwaterbottles #tamilnews