செய்திகள்

பிறப்பு - இறப்பு சான்றிதழுக்கு கட்டணம் உயர்வு

தமிழகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பதிவு செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாட்டில் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்வது இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. சில சேவைகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது பிறப்பு இறப்புகளை பதிவு செய்வதில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைச்சாமி கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைனிலும் பதிவு செய்ய கட்டணம் கிடையாது.

ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்லும் போது பிறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் ஏழைகள் யாரும் பாதிக்கப்படவில்லை.

ஒரு மாதம் வரைக்கும் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யாமல் அதன் பிறகு செய்பவர்களுக்கு கட்டணம் ரூ.2-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

30 நாட்களுக்கு மேல் ஒரு வருடம் வரை பதியாமல் இருப்பவர்களுக்கு ரூ.5-ல் இருந்து ரூ.200 ஆகவும், ஒரு வருடத்திற்கு மேல் பதியாமல் இருப்பவர்களுக்கு ரூ.10-ல் இருந்து ரூ. 500 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கு மேல் பெயரை பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கான கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சிலர் பிறந்த தேதியை மாற்றி பதிவு செய்வதாலும் முறைகேடுகளில் ஈடுபடுவதாலும் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு ஒப்புதலுடன் கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டண உயர்வு நடைமுறையில் இருக்கிறது. அடுத்த மாதம் முதல் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த கட்டண உயர்வு ஏழை-எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.