நெல்லை:
தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள தெற்கு பனவடலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தவசிக்கண்ணு மகன் அய்யப்பன் (வயது 34). இவர் கேரளாவில் பழைய இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
அய்யப்பன் அவருடைய மனைவி செல்வி (30), அய்யப்பனின் தங்கை ஜோதி (32) ஆகிய 3 பேரும் நேற்று மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு பனவடலிசத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
பனவடலிசத்திரத்தை கடந்து பசும்பொன்நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியாக சென்னையை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(61) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவர்களின் உறவினர்கள் அங்கு வந்தனர்.
மேலும் அவர்கள் திடீரென நெல்லை-சங்கரன்கோவில் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அய்யப்பன் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். நெல்லை-சங்கரன்கோவில் சாலையில் 108 ஆம்புலன்ஸ் சேவைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3 பேரின் உடல்களையும் எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சங்கரன்கோவிலில் இருந்து வந்த வாகனங்கள் குருக்கள் பட்டி அருகே உள்ள சண்முக நல்லூரில் நிறுத்தப்பட்டது. நெல்லையில் இருந்து வந்த வாகனங்கள் தேவர்குளம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. பின்னர் அய்யப்பன், செல்வி, ஜோதி ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் பலியான அய்யப்பன் தற்போது தான் தெற்கு பனவடலியில் புதிய வீடு ஒன்றை கட்டினார். அதற்கான கிரகப்பிரவேசம் இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ளது. அதற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது தான் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி துடித்தது பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்தது.