கழுகுமலை:
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள வானரமுட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 35). சமையல் மாஸ்டரான இவரும், குமரெட்டியாபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளான கண்ணன் (40), மாரிமுத்து (30) ஆகிய 3 பேரும் நேற்று கழுகுமலையில் இருந்து கோவில்பட்டியை நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
காலாங்கரைப்பட்டி விலக்கு அருகே உள்ள வளைவு பாதை அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதற்கிடையே மோதிய வேகத்தில் பைக்கின் பெட்ரோல் டேங்க் தரையில் உரசியதில் பைக் தீ பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த கழுகுமலை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பைக்கின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
மேலும் மோதிய வேகத்தில் காரின் இரண்டு முன்பக்க சக்கரங்களும் கழன்று அருகே உள்ள ஓடையில் விழுந்தது. சம்பவ இடத்துக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
பின்னர் கழுகுமலை போலீசார் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காரை ஓட்டி வந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (25) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி சாலையில் காலாங்கரைபட்டி பகுதியில் உள்ள இந்த ஆபத்தான வளைவால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், அதை தடுக்க அப்பகுதியின் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews #accident